தமிழ்நாடு

ஆங்கிலேயர் காலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்டு, பதிவு புதுப்பிக்கப்படாத நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சிஎஸ்ஐ அறக்கட்டளைக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 12.66 ஏக்கர் நிலத்தை, சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சிஎஸ்ஐ அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனி நபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பெருமளவில் நிலங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாமல் சொற்ப தொகையை வாடகையாக கொடுத்துவிட்டு அவர்கள் அந்த நிலங்களை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்கள் நல திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு, பதிவு புதுப்பிக்கப்படாத நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க நில நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறிப்பிட்ட அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதால் அதில் சாலை அமைக்க அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.