Nirmala devi pt desk
தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு - குற்றவாளி நிர்மலா தேவிக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

webteam

செய்தியாளர்: கே.கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக வழக்கு நடைபெற்று வந்தது. இதில் இரண்டு மற்றும் மூன்றாவது எதிரிகளான கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் எதிரி என கருதப்பட்ட நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 29) உறுதி செய்துள்ளது. ஆனால், அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தெரிவித்திருந்தார்.

நிர்மலா தேவி

இதனை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது.... “நீதிமன்றம் அனைத்தையும் சரிபார்த்த பின்னரே தீர்ப்பு வழங்கும். இந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை குற்றவாளிக்கு வழங்காமல் தீர்ப்பு சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து பேச வேண்டும் என குற்றவாளியின் வழக்கறிஞர் கோரிக்கை வைக்கிறார்.

நாளை (இன்று) என்ன வாதம் வைக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. உடல்நலக்குறைவு குறித்து பேசலாம் அல்லது இரண்டாவது - மூன்றாவது எதிரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தண்டனையை நிர்மலா தேவிக்கு குறைத்து வழங்குமாறு கேட்கலாம்.

எப்படியாகினும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதில் இருந்து பின் வாங்க முடியாது. தண்டனையை குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கலாம். அது அவர்களின் உரிமை. பிரசாந்த் பூஷன் வழக்கை மேற்கோள்காட்டி பல்வேறு வழக்குகளில் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

Nirmala devi

இது அனைத்தும் எளிய மக்களுக்கும் சாத்தியமான நடைமுறைதான். குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிர்மலா தேவி தற்போதே (நேற்று) சிறைக்குதான் அனுப்பப்படுவார். மீண்டும் அவர் நாளை (இன்று) வரவழைக்கப்பட்டு தண்டனை காலம் குறித்து அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.