தமிழ்நாடு

2 ரூபாய் கூடுதலாக வசூலித்த நிறுவனத்துக்கு ரூ68 ஆயிரம் அபராதம்...!

2 ரூபாய் கூடுதலாக வசூலித்த நிறுவனத்துக்கு ரூ68 ஆயிரம் அபராதம்...!

webteam

கூடுதலாக 2 ரூபாய் வசூலித்த பிக்பஜார் நிறுவனத்திற்கு 68 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாபு. இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “2017 மார்ச் 12 ல் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிக் பஜாரில் 5224 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கினேன். அவற்றை சரிபார்க்கும் போது ஒரு பொருளின் விலை 74கிற்கு பதிலாக 76 என 2 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து அந்த ஷோரூம் மேலாளரை அணுகி கேட்டபோது, சரியாக பதில் அளிக்காமல், ஏளனமாக மனது புண்படும் விதமாக என்னை பேசி அவமதித்தார். இது போன்று அடக்கவிலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் முறைகேடு தொடக்கம் முதலே இங்கு நடைபெற்று வருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இது தொடர்பாக இழப்பீடு கோரி மதுரை காளவாசல் பிக் பஜார் நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை. ஆகவே, சேவை குறைபாட்டோடு, மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதற்கு நஷ்ட ஈடாக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்பில் “மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிக்பஜார் நிறுவனம், மனுதாரரிடம் கூடுதலாக வசூலித்த 2 ரூபாயோடு, மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாயையும், வழக்கு செலவிற்காக 3 ஆயிரம் ரூபாயையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மாநில நுகர்வோர் நல நிதியகத்தில் 50 ஆயிரத்தை 6 வாரங்களுக்குள் செலுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.