Court pt desk
தமிழ்நாடு

மகாத்மா காந்தி குறித்து அவதூறு: முன்ஜாமீன் கோரிய நபருக்கு நூதன நிபந்தனை ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்!

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபர் முன்ஜாமீன் கோரி மனு கொடுத்துள்ளார். அவருக்கு நூதன நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

பாரதிய பிரஜா ஐக்கிய கட்சியின் மாநில செயலாளர் வேல்முருகன், மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், “கல்யாண சுந்தரம் என்ற முகநூல் பெயரில் மகாத்மா காந்தியை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதோடு, காந்தியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் கல்யாண சுந்தரம் மீது மதுரை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கல்யாண சுந்தரம்

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கல்யாண சுந்தரம், மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கல்யாண சுந்தரத்துக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வேல்முருகன் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, தேசத் தந்தை மகாத்மா காந்தியை இழிவாக முகநூலில் பதிவிட்ட கல்யாண் என்ற கல்யாண சுந்தரத்திற்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

அந்த நூதன நிபந்தனை இதுதான்...

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் பணியாற்றும் நூலகருக்கு உதவியாக வேலை செய்து புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் சரண்டராக வேண்டும், மதுரை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தினமும் காலை 9 மணிக்கு தொடர்ந்து 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.