திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை, பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். பின்னர், பட்டாவை எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.இதை ஏற்ற நீதிபதிகள், வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக திருவண்ணாமலையில் குறிப்பிட்ட அந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது.