பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
2005ல் சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலின்போது, கே.கே நகர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை பிடுங்கி சென்றதோடு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும் 10 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது மனுக்கள் மீது மனுக்களை தாக்கல்செய்து விசாரணையை தாமதப்படுத்தினர் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், கார் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.