தமிழ்நாடு

கோடநாட்டில் புதிய ஆட்கள் எப்படி கொள்ளையில் ஈடுபட முடியும்? - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரமாரி கேள்வி

webteam

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் வரும் 8ஆம் தேதி ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில், 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம்பகதூர் என்ற காவலாளி மர்மமான முறையில் மரமடைந்தார். இந்த வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், மனோஜ், ஜாம்சீர் அலி, உதயகுமார் உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ள நிலையில் சயான், மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஏ.நடராஜனும் எதிர் தரப்பு சார்பில் பிரபாகரனும் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடினர்.

சயான், மனோஜ் சார்பில் வாதாடிய பிரபாகரன் அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினார். அதில், கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள கோடநாடு தேயிலை தோட்டத்தில் புதிய நபர்கள் சென்று கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை. அங்கு நீண்ட காலமாக சென்று வந்த சிலராகத்தான் இருக்க முடியும். 

குறிப்பிட்ட அறைக்குள் சென்று பொருட்களை கொள்ளை அடித்து செல்லும் அளவிற்கு கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு தந்தது யார்? கேமராவானது பேட்டரி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் இருந்தாலும் கொலை கொள்ளை நடந்த நாளில் ஏன் அணைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கேமராக்களை இயக்கி வந்த தினேஷ் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?. கடிகாரங்கள், கிரிஸ்டல் பொம்பை ஆகியவையே கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால், உடன் எடுத்து சென்ற ஆவணங்கள் அடங்கிய பெட்டி எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.