தமிழ்நாடு

குளிருக்கு கதவை அடைத்ததால் புகை மூட்டம்: தம்பதி உயிரிழப்பு

குளிருக்கு கதவை அடைத்ததால் புகை மூட்டம்: தம்பதி உயிரிழப்பு

rajakannan

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் பங்களாவில் நேபாளைச் சேர்ந்த தம்பதியர் குளிருக்கு கதவுகளை அடைத்து ஜெனரேட்டரை இயக்கியதால் புகைமூட்டத்தில் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் என்.ஆர்.கார்டன் பகுதியில் உள்ள தனியார் பங்களாவில் நேபாளத்தைச் சேர்ந்த சர்மா, அவரது மனைவி குமாரி ஆகியோர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் மேலாளர் ரங்கநாதன் இவர்கள் இருவரும் தங்கியிருந்த அறைக் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அருகே உள்ள ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது தம்பதியர் இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். 

உடனடியாக கொடைக்கானல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் இறந்திருப்பது தெரிய வந்தது. இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். 

இது குறித்து காவல் துறையினர் தெரிவித்த போது கரண்ட் இல்லாத காரணத்தினால் அறைக்குள்ளே உள்ள ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். இதில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாகவும், அறையை விட்டு இந்த புகை வெளியேற வகை இல்லாத காரணத்தினாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர் என்று கூறினர். ஜெனரேட்டர் புகையின் காரணமாக நேபாள தம்பதியனர் உயிரிழந்தது கொடைக்கானலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.