தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு

webteam

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தம்பதிகளின் 6 மாத குழந்தை விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளது. 

தமிழ்நாட்டை சேர்ந்த சக்தி முருகன்-தீபா தம்பதி ஆஸ்திரேலியாவில் கணினி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். இந்தத் தம்பதிக்கு ஹிருத்திக் என்ற 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையிலுள்ள தங்களது பெற்றோர்களை சந்திப்பதற்காக இந்தியா வர திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக இவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் மலேசியா வந்துள்ளனர். பின்னர் மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானத்தின் மூலம் நேற்றுஅதிகாலை 1 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இவர்கள் சோதனைகளை முடிப்பதற்காக நின்றபோது இவர்களது குழந்தை ஹிருத்திக் எந்தவித அசைவையும் கொடுக்காமல் இருந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் விமானநிலைய மருத்துவமனையில் குழந்தையை பரிசோதிக்க அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தை ஹிருத்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை விமானத்தில் உயிருடன் இருந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.