காயப்பட்ட கன்று புதியதலைமுறை
தமிழ்நாடு

வனவிலங்கை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு.. உணவென்று கடித்த கன்றுக்கு நேர்ந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட காய்கறி கழிவுகளில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த கன்றுகுட்டி தாடை கிழிந்து படுகாயம். உயிருக்கு ஆபத்தான நிலையில் துடி துடிக்கும் சோகம்.

யுவபுருஷ்

செய்தியாளர் - இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பவின்குமார். இவர் தனது வீட்டில் சொந்தமாக 10 பசுக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பவின்குமார் தனது பசுக்களை வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள பாலாற்று படுக்கையில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.

தொடர்ந்து, மேய்ச்சலுக்குப் பிறகு பசுக்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவர பாலாற்றிக்கு அவர் சென்றபோது, அங்கு வனவிலங்குகளை வேட்டையாட காய்கறி கழிவுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கன்று ஒன்று எதிர்பாராமல் கடித்துள்ளது.

நாட்டுவெடிகுண்டு

இதில் கன்றுகுட்டியின் தாடை கிழிந்து அதிக அளவு ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதை பார்த்து மனம் வெதும்பி போயுள்ளார் பவின்குமார்.

தொடர்ந்து, சம்பவம் குறித்து பவின்குமார் ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த நபர்களை தேடி வருகின்றனர்.

காயப்பட்ட கன்றுடன் பவின்குமார்

மேலும் இதே போல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வனவிலங்குகள் மற்றும் காட்டுபன்றிகளை வேட்டையாட சிலர் நாட்டு வெடிகுண்டுகளை, ஆங்காங்கே மறைத்து வைப்பதால் அதனை எதிர்பாரா விதமாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் கடித்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைப்பவர்கள் மீது வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.