தீக்குளிக்க முயன்ற வார்டு கவுன்சிலர் சுப்ரமணியன்  PT WEP
தமிழ்நாடு

“எங்கிட்ட 2.35 லட்சம் வாங்கிட்டு” - சேர்மனுக்கு எதிராக திடீரென தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர்!

PT WEB

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் 18 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரிடம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் மற்றும் துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் கொளத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் பகுதியில் 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பள்ளி கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் முறையான நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடாமல் 27 , 28 ஆகிய தேதிகளில் ஒப்பந்தம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென 29, 30 தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்து டிடி எடுத்துக் கொடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியையே சேர்ந்த திமுக கிழக்கு, மேற்கு,மத்திய,ஒன்றிய செயலாளர்களான பூரணசந்தர், சந்திரன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் பிற கவுன்சிலர்கள் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவுன்சிலர் சுப்ரமணியன்

இதனைதொடர்ந்து சுப்பிரமணியன் ஒப்பந்தத்தை தனக்கு வழங்குவதாகத் தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், இருவரையும் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சுப்பிரமணியைச் சமரசம் செய்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுசிலர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.