தமிழ்நாடு

கட்டுக்கட்டாக பணம்; அசர வைக்கும் தங்க நகைகள்... சோதனையில் சிக்கிய பொறியாளர்

கட்டுக்கட்டாக பணம்; அசர வைக்கும் தங்க நகைகள்... சோதனையில் சிக்கிய பொறியாளர்

webteam

ராணிப்பேட்டையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில், மூன்றே கால் கோடி ரூபாய் ரொக்கம், 450 சவரன் தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளி உள்ளிட்டவை சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

வேலூர் மண்டல தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர், வேலூர் மண்டத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பல்வேறு அனுமதிகளை வழங்க லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில், வேலூர் - விருதம்பட்டில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், செவ்வாயன்று இரவு அதிரடியாக சோதனை நடத்தினர்.

அந்த வீட்டிலும், அவரது காரிலும் கணக்கில் வராத சுமார் 34 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இந்தச் சோதனையில் இதுவரை, 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க ஆபரணங்கள், தங்கக் காசுகளாக 450 சவரன், ஆறரைக் கிலோ வெள்ளிப்பொருள்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் குறித்த ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.