நெல்லை சாஃப்டர் பள்ளியில் 3 மாணவர்கள் இறந்த சம்பவத்தில் கைதான தாளாளர், ஒப்பந்ததாரர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் இடைவேளையின்போது பள்ளி கழிவறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மீதி 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, சாஃப்டர் பள்ளி தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூன்று பேர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைதான தாளாளர் சாலமன் செல்வராஜ், ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ஞான செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.