தமிழ்நாடு

அடடே! என்ன அழகு ஓவியங்கள்! - மாணவர்களை வரவேற்க தயாராகும் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள்

EllusamyKarthik

கொரோனா ஊரடங்கு மனிதனுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதே வேளையில் ஊரடங்குக்கு அடுத்து வரும் சமுதாயத்தை சீரமைப்பதற்கும் தகுந்த கால அவகாசத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இதை சரியான திட்டமிடல் மற்றும் துரித நடவடிக்கையின் மூலம் சாத்தியப்படுத்தி உள்ளது தூத்துக்குடி மாநகராட்சி.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது தூத்துக்குடியை சீர்மிகு தோற்றத்திற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடைபாதை விரிவுபடுத்துதல், முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் சாலையின் தரத்தினை மேம்படுத்துதல், பூங்காக்கள், அறிவியல் மையம், இணைய வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு தளங்கள், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் ஆகியவற்றின் மூலம் தூத்துக்குடி படிப்படியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இறுதி கட்ட நிலையை அடைய உள்ளது.

இதில் குறிப்பிடும்படியாக விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் பல்வேறு இடங்களிலும் வரையப்பட்டு வருவது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பார்த்த உடனேயே ஒரு நிமிடம் நின்று அவற்றை பற்றி சிலாகிக்க செய்யும் அளவுக்கு தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பார்ப்போரின் கண்ணுக்கு விருந்து அளிப்பதாக உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியங்கள் மெய்நிகர் பிம்பத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. குரூஸ் புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வெளிப்புற சுவற்றில் அழகாக்கும் பொருட்டு ஒப்பந்த பணியாளர்களை கொண்டு புதுமை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையை பாதுகாக்க வேண்டும், இயற்கை வளங்களை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதனின் தலையில் இருந்து மரக்கிளைகள் படர்வது போல ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைப் போல ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களின் உடை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், ஆந்தையின் கூர்மையான பார்வையை உணர்த்தும் ஓவியமும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

இதுதவிர லெவிஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தூய்மை பாரத இயக்கத்தின் குறிக்கோள்களை உணர்த்தும் வகையில் பள்ளியின் சுவற்றில் கழிப்பறையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, குப்பையை தரம் பிரித்து வழங்குவது, மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை பயன்படுத்தல், பிளாஸ்டிக் தவிர்ப்பு, நெகிழி இல்லா சமுதாயம் அமைத்தல், அகத்தூய்மை, புறத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்திப் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.

இது தவிர குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் கார்ட்டூன் சித்திரங்களும் பள்ளியின் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிரதான தொழிலான விவசாயத்தை உணர்த்தும் வகையில் ஏர் உழவுதல், இயற்கை பேணல் உள்பட பல்வேறு மூட வலியுறுத்தி வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பள்ளியின் தோற்றத்தையே அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல.

மாநகராட்சியின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் மேலும் பல இடங்களில் தொடரவேண்டும் என்பது தூத்துக்குடி நகர வாழ் மக்கள் எண்ணம்.