தமிழ்நாடு

`மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை’- வங்கி மேலாளர் பலியானதில் மாநகராட்சி தரப்பு விளக்கம்

`மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை’- வங்கி மேலாளர் பலியானதில் மாநகராட்சி தரப்பு விளக்கம்

நிவேதா ஜெகராஜா

சென்னையில் திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மரம் விழுந்ததால் அதுனுள் இருந்த வங்கி மேலாளர் உயிரிழந்திருந்தார். இந்த விபத்துக்கு, மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

சென்னை போரூர் மங்கலம் நகரை சேர்ந்தவர் வாணி கபிலன் (57). இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், பல்வேறு கவிதை தொகுப்பு புத்தகங்களை எழுதி உள்ளார். நேற்று மாலை பணி முடிந்து தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு தங்கையான எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். அந்தக் கார் கேகே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் கார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவலறிந்த கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் நசுங்கி உயிரிழந்த வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த எழிலரசி, கார் ஓட்டுனர் கார்த்திக் கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டி இருந்ததாலேயே மரம் சாய்ந்து விழுந்ததாக கூறப்பட்டது.

இறந்து போன வாணி கபிலன் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் மேலாளராக பல இடங்களில் பணியாற்றி உள்ளார். தமிழ் மீது கொண்ட பற்றால் பல கவிதை தொகுப்புகளையும் எழுதி உள்ளார். அந்த மரத்தை அப்புறப்படுத்தாமல் விட்டதே இந்த விபத்துக்கு காரணம் எனக்கூறி, `யாரோ சிலர் செய்த அலட்சியத்தால் பெண் கவிஞர் வாணி பலியாகி இருப்பது சோகம்’ என வாணியின் மரணத்திற்கு பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த அலட்சியத்திற்கு யார் காரணம் என்ற விசாரணையில் கே.கே நகர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

`மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டும் போது மரத்தை வெட்டி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பாதையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாததால் விபத்து நிகழ்ந்து உள்ளது தெரிய வந்துள்ளது’ என்ற விமர்சனங்களை தொடர்ந்து, அது தொடர்பாக காவல்துறை பள்ளம் தோண்டிய ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்துக்கு, மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. விபத்து நேரிட்ட இடத்துக்கு 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2 நாள்களாகப் பெய்த மழையாலும் மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் பழமையான அந்த மரம் சாய்ந்துள்ளதாக மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. அங்கு 2 நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

- செய்தியாளர் சுப்ரமணியன்.