தமிழ்நாடு

கவுன்சிலர் தகுதியை இழந்ததாக திமுக நபருக்கு தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் - என்ன காரணம்?

கவுன்சிலர் தகுதியை இழந்ததாக திமுக நபருக்கு தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் - என்ன காரணம்?

சங்கீதா

தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகத்தின் அக்கா மகன், கவுன்சிலர் தகுதியை இழந்ததாக மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 16-வது வார்டில் மீண்டும் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகம். இவரது அக்கா மகன், அண்ணா பிரகாஷ். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கவுன்சிலராக போட்டியிடக் கூடியவர்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்கக்கூடாது. மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது. இந்நிலையில் அண்ணா பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத், அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அதனை அவர் மறைத்து மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி கமிஷனருமான சரவணக்குமார் அண்ணா பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால் அண்ணா பிரகாஷ் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியினை இழந்து விட்டதாக கூறி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ஒருவர் தன் பதவியை இழந்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.