ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் வாங்கினால் மட்டுமே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நடைமுறை தமிழகத்தில் தற்போது தமிழகத்தில் உள்ளது. இ-பாஸ்க்கு விண்ணப்பித்தாலும் பாஸ் கிடைப்பதில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தினசரி 12 ஆயிரம் பேருக்கு குறையாமல் சோதனை நடத்தப்படுகிறது. ஆயிரம் பேருக்கு பாசிட்டிவ் வந்தால் 10,000 பேருக்கு சோதனைகளை நடத்த வேண்டும் என்பது விதி. இதுவரை 5.70 லட்சம் பேருக்கு சோதனை செய்துள்ளோம். இன்னும் 10-15 நாட்களில் சென்னையின் 10% மக்கள் தொகை அளவான 8 லட்சம் பேருக்கு சோதனையை நடத்திவிடுவோம். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பாசிட்டிவை குறைக்க முடியும். இதுவரை 330 டன் வரையிலான கொரோனா மருத்துவ கழிவுகள் மணலியில் எரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
மேலும், “சென்னைக்கு வர வேண்டும் என விரும்பும் நபர்கள் முறையாக இ-பாஸை ஆவணங்கள் உடன் பதிவு செய்யலாம். ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கும் ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.