குழந்தைக்குப் பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த கொரோனாவால் வறுமையில் சிக்கியவர்களின் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சரவணன் என்பவரும் ஒருவர். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரவணன் தற்போது வேலை இல்லாமல் திண்டாடி வந்தார். இதனால் அவரது குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கூட பணமில்லாமல் அவர் வறுமையில் சிக்கினார். மாத வாடகை கொடுக்கவில்லை என அவரது வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார். வறுமையில் சிக்கிச் செய்வதறியாது இருந்த சரவணன் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இவரது செய்தியைப் பார்த்த நடிகர் விஜய்யின் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்ட சரவணனின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான வாடகை தொகையும், 25 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி செய்து உள்ளனர்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்