கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்ற அச்சத்தையும் தாண்டி கோயம்பேட்டில் மக்கள் குவிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மாலைக்குப் பின்னர் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் எனவும், போக்குவரத்துகள் முடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒருவார கால ஊரடங்கு உத்தரவை சமாளிக்க வேண்டும் என்ற வகையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். கொரோனா பரவிடும் எனவே தாய், தந்தை மற்றும் சொந்த பந்தங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டால் அச்சம் நீங்கிவிடும் என்ற நோக்கில் பணிபுரியும் இளைஞர்கள், படிக்கும் மாணவர்களும் ஊருக்கு செல்ல மும்முரம் காட்டுகின்றனர்.
ஏற்கனெவே ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியாக பேருந்துகள் மட்டுமே உள்ளன. இதனால் ஏராளமானோர் சென்னை கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் கூடியுள்ளனர். ஆனால் கூட்டமாக கூடினால் கொரோனா வரும் எனவே அதனை தடுக்க வேண்டும் என அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று இருக்கிறது எனவே அவற்றை தனிமைப்படுத்துங்கள் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
இப்படி இருக்கையில் சென்னையில் இருக்கும் மக்களை வெளியூர்களுக்கு செல்ல அனுமதிப்பது கொரோனா தொற்றை தமிழகம் முழுவதும் பரப்புவதற்கு வழிவகுக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று தான் கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்தும் மருத்துவ வல்லுநர்களின் அறிவுரையை கேட்காமல் இத்தாலி அரசு மக்களை வெளியூர் செல்ல அனுமதித்திருந்தது. தற்போது இத்தாலியை பார்த்து உலகமே பரிதாபப்படுகிறது.
நாளை மாலை வரை தமிழகத்தில் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தும், கோயம்பேட்டில் கூட்டம் குறைந்தபாட்டில்லை. ஜன்னல், படிக்கெட்டுகள், பேருந்தின் கூரை என அனைத்திலும் மக்கள் ஏறிவிட்டனர்.
கொரோனா கொடுமை ஒருபுறம் என்றால், மறுபுறம் தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளை என மக்கள் புலம்புகின்றனர். இதனைப் பார்க்கும்போது கொரோனாவை தடுக்க இவ்வளவு பாடுபட்டும், கடைசியில் பேருந்து நிலையத்தில் கோட்டை விட்டுவிட்டோமோ என சமூக ஆர்வலர்கள் வருந்துகின்றனர்.