கோவையில் பெண் மருத்துவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அவர் பணியாற்றிய மருத்துவனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த 42 வயது பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஈரோட்டில் இருந்து கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். தற்போது அப்பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அம்மருத்துவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஈரோடு ரயில்வே மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மருத்துவர் சிகிச்சை அளித்த நோயாளிகளின் விவரங்களும் சுகாதார துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் பணி செய்த ரயில்வே மருத்துவமனை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு ட்ரோன் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்டுள்ள பெண் மருத்துவருக்கு அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.