தமிழ்நாடு

திருவாரூர்: நகராட்சிக்கீழ் இயங்கும் கடைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

திருவாரூர்: நகராட்சிக்கீழ் இயங்கும் கடைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

Sinekadhara

பொதுமக்கள் அச்சமின்றி பொருட்களை வாங்க திருவாரூர் நகராட்சிகீழ் இயங்கும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்ற கணக்கெடுப்பை நகராட்சி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் 4 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துக்கு கீழ் இயங்கும் கடைகளில் பொதுமக்கள் அச்சமின்றி பொருட்களை வாங்கிச்செல்ல அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்ற கணக்கெடுப்பை நகராட்சி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. 

கடையில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அந்த சான்றிதழை அவர்கள் கடைகளில் பொதுமக்கள் பார்வையில் படும்படி புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்ளலாம் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணிகளை முடித்தபிறகு பட்டியலை நகராட்சி அலுவலகத்தில் கொடுப்பார். பட்டியலில் உள்ளவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகு அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என்றும், நகராட்சி நிர்வாகத்துக்குக்கீழ் இயங்கும் அனைத்துக் கடைகளிலும் பணியாற்றும் நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இந்த பணியை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.