தமிழ்நாடு

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம்

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம்

Sinekadhara

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நாளை காலை நடைபெறுகின்றது. வழக்கமாக சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவவது வழக்கம் கொரோனா காரணமாக இந்தாண்டு ஆன்லைன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கொரோன பரவல் காரணமாக காரைக்காலில் வரும் 27ஆம் தேதியன்று சனீஸ்வரன் கோவிலில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்க கூடாது என நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கொரோனா விதிகளை அமல்படுத்த துணைநிலை ஆளுநர், மாவட்ட ஆட்சியர், இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் வழக்கு தொடர்ந்தவர் பேசி முடிவு எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று நீதிபதி அறிவுறுத்தலின்படி தரங்கம்பாடியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இந்து அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா மற்றும் வழக்கை தொடர்ந்த நாதன் ஆகியோர் தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், சனி பெயர்ச்சி விழா இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், நேரலை செய்யக்கூடிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சபரிமலை கோவிலை போல சனிப்பெயர்ச்சி விழாவிற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து முடிவை காட்ட வேண்டும். கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்பதால் 200 நபர்களுக்குள் அனுப்பப்படுவார்கள். கோவிலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

நீதிமன்ற வழிகாட்டுதல் படி எளிமையான முறையில் விழாவை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல் தெரிவித்து இருந்தார்.

கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து சிங்காரவேலன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று தெரிவித்தனர்.

விழாவில் பங்கேற்போருக்கு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் எனவும் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளை தொடங்கி 48 நாள்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.