கோவில்பட்டியில் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்களை பொறியியல் பட்டதாரி ஒருவர் வழங்கி வருகிறார்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகளை அறிவித்தாலும் அவை போதுமானதாக இல்லை. பல இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். அதேபோல கொரோனா காலத்திலும் தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன்வந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் முட்டை மொத்த வியாபாரம் செய்துவரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் விக்னேஷ் என்பவர், கொரோனா காலத்தில் தன்னுடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று, 24 மணிநேரமும் மக்களுக்காக பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்க முடிவு செய்தார்.
அதன்படி கோவில்பட்டி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்களை விக்னேஷ் வழங்கினார். மேலும் தொடர்ந்து முட்டையுடன் சுண்டல் வழங்க முயற்சி செய்து வருவதாக விக்னேஷ் தெரிவித்தார். இளைஞர் விக்னேஷின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.