தமிழ்நாடு

தமிழகத்தின் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை

தமிழகத்தின் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை

JustinDurai

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, பூஜ்ஜியம் புள்ளி 48 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தாலும், தற்போதைய நிலை அச்சம் தருவதாக இருப்பதாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய தலைமுறையுடன் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தொற்று சில வாரங்களாக 450 க்கும் குறையாமல் உறுதியாகி வருவதாகக் கூறினார். தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவது அதிக அளவில் காண முடிவதாக அவர் கூறினார்.

ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறித்து எச்சரிக்கை தெரிவித்த அவர், மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார். அந்த வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு தமிழக மக்களை அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், இல்லையெனில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் நேரிடும் என்று எச்சரிக்கை தெரிவித்தார்.