தமிழ்நாடு

கொரோனா விரைவுச் செய்திகள் மே 4 - சேலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முதல் ஐபிஎல் நிறுத்தம் வரை

கொரோனா விரைவுச் செய்திகள் மே 4 - சேலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முதல் ஐபிஎல் நிறுத்தம் வரை

Sinekadhara

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பின. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில், ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகள் ஏற்கனவே நிரம்பின. இதனால் மருத்துவமனை அழைத்துவரப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடுத்தர தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவர்களுக்கும் அரசு மருத்துவமனை நோக்கிச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனையில் விரைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

சேலத்தில் உள்ள நடுத்தர அளவிலான தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் அங்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற முடியாத நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அதிகபட்ச மூச்சுத்திணறலோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவோர் வரும் வழியிலேயே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் சேலம் அரசு மருத்துவமனையில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 3 முகவர்கள் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள காரணத்தால் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப் படுவதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரேநாளில் 2.75 லட்சம் டோஸ் தடுப்பூசி வருகை

தமிழகத்துக்கு 2,75,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு ஒரே நாளில் கொண்டுவரப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில், காலையில் கோவாக்சின் மற்றும் மாலையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி ஒரே நாளில் 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து மற்றும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இதன்மூலம், தமிழகத்திற்கு இதுவரை 73 லட்சத்து 60 ஆயிரத்து 720 டோஸ்கள் வந்துசேர்ந்துள்ளன. தற்போது சுமார் 7 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் சுமார் 5 நாட்களுக்கு மட்டுமே இவை போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது சுமார் 7 லட்சம் வரை இருக்கும் கையிருப்பு சுமார் 4 நாட்கள் வரையே போதுமானதாக இருக்கும். ஏனெனில் ஒருநாளைக்கு சுமார் 1.15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

தமிழகத்தில் 8.83% தடுப்பூசிகள் வீணடிப்பு

தமிழகத்துக்கு இதுவரை 68 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 8.83 % தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா 2 ஆவது அலை வேகமெடுத்துள்ளநிலையில், இதனை சமாளிக்க அடுத்த 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 48 லட்சத்து 41 ஆயிரத்து 670 லட்சம் தடுப்பூசிகள் அனுப்ப உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், இன்று தமிழகத்துக்கு மட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை மாநிலங்களுக்கு16 கோடியே 68 லட்சத்து 28 ஆயிரத்து 950 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதில் தமிழகத்தில் மட்டும் 8.83% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் 12 சதவிகிதத்திற்கு மேல் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்ட நிலையில் தற்போது வீணடிப்பு சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் 50 லட்சம் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத்தீவிரமாக உள்ளது. அதற்க உதாரணம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யபப்பட்டது தான். இதுவரை எந்த நாட்டிலும் பதிவாகாத தினசரி தொற்று எண்ணிக்கை அது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 316 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியை கடந்தது. அதற்கு10 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வெறும் 5 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில், பீகார் மாநிலத்தில் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 72 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ள டெல்லி அரசு, இதனால் பொதுமுடக்கம் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என மக்கள் எண்ண வேண்டாம் என்றும், அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கான நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத்தீவிரமாக உள்ளது. அதற்க உதாரணம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யபப்பட்டது தான். இதுவரை எந்த நாட்டிலும் பதிவாகாத தினசரி தொற்று எண்ணிக்கை அது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 316 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியை கடந்தது. அதற்கு10 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வெறும் 5 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில், பீகார் மாநிலத்தில் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 72 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ள டெல்லி அரசு, இதனால் பொதுமுடக்கம் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என மக்கள் எண்ண வேண்டாம் என்றும், அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கான நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 21,000-ஐ‌ தாண்டியது

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 790 சிறார்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப் பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேர் உட்பட 21 ஆயிரத்து 228 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 790 சிறார்கள் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையிலான கொரோனா பாதிப்பு 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 19 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 9 ஆயிரத்து 450 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 228 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 608 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 509 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 152 பேரும், மதுரை மாவட்டத்தில் 787 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 747 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

‌‌‌‌‌‌‌‌‌‌ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்புமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நேற்று வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தலைமைச்செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர், நிதித்துறை செயலர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதிய கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதாலும் அனைத்துத்துறைகளும் சிறப்பாக கண்காணித்து செயல்படுத்தவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும், அனைத்து மாவட்டங்களிலும் மருந்து கிடைப்பதை உறுதி செய்யவும், படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதை கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பத்திரிகையாளர்கள் இனி முன்களப்பணியாளர்கள்: மு.க.ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி மற்றும் ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் மழை, கொளுத்தும் வெயில் மற்றும் பெருந்தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவர். எனவே, முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மம்தா பானர்ஜி, பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 1,212 செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்:

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்களை நிரந்தரப் பணிக்கு மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட அனைவரும் சென்னையில் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், அவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் பணிக்குச் சேர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்காலிகப் பணியில் 15ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வந்த செவிலியர்கள் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவர்.

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதல் இரு கட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கொரோனா பரவலால் எஞ்சிய இரு கட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரமேஷ் பொக்ரியால், மே 24 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர் உதவி ஆணையா் தெரிவித்துள்ளார். கொரோனா 2-ஆவது அலையால், வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி பணியாற்ற உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்லாமலும் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க ஏதுவாக தொழிலாளா் நலத் துறையில் தனியாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை 044-24321438 அல்லது 044-24321408 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

லண்டனில் இருந்து தமிழகம் வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்

லண்டனில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 450 சிலிண்டர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்துள்ளன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 450 சிலிண்டர்கள் இசென்னை வந்தடைந்தன.

ஐபிஎல் சீசன் 14 தற்காலிகமாக ஒத்திவைப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கொண்டாடப்பட்டு வந்த ஐபிஎல் 20 ஓவர் தொடர், வீரர்கள் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இல்லாத மைதானங்கள், பயோ செக்யூர் பபுள், உச்சபட்ச மருத்துவப் பாதுகாப்புகள் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நடந்து வந்தது. தேர்தல், கொரோனா உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு 6 மைதானங்களில் மட்டும் போட்டிகள் திட்டமிடப்பட்டபடி நடந்து வந்தன. முதல் 20 லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் சிக்கலின்றி நடந்து முடிந்த சூழலில், கொரோனா உச்சத்தில் இருக்கும் தலைநகர் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் அடுத்த 16 போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. 9 போட்டிகள் சுமூகமாக முடிந்த நிலையில் 7 போட்டிகள் மட்டுமே டெல்லி மற்றும் அகமதாபாத்தில் எஞ்சியிருந்தன.

இவ்வாறான சூழலில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் களமிறங்கவிருந்த கொல்கத்தா வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிடோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பேட் கம்மின்ஸும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு நலன் கருதி கொல்கத்தா- பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் சென்னையின் பந்து வீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட இருவருக்கு இருவருக்கும் தொற்று உறுதியானதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெல்லி மைதான ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது.

லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மைதானத்திற்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஐதராபாத் வீரர் சஹாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த அமித் மிஸ்ராவுக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானதால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர் முழுவதும் நடைபெறுமா? என்ற சந்தேகம் படர்ந்த சூழலில் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி நடப்பு சீசனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெறுமா? அல்லது வேறு ஏதேனும் உக்தி கையாளப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மொத்தம் 56 லீக் போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளன. பஞ்சாப் டெல்லி அணிகளைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தலா 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. பல நாடுகள் இந்தியாவிலிருந்து பயணிகள் வர முட்டுக்கட்டை போட்டுள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதிலும் பல சிக்கல்கள் உள்ளதால் ஐபிஎல் நிர்வாகம் எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது கவனம் பெற்றுள்ளது.