தமிழ்நாடு

ராஜீவ்காந்தி மருத்துவமனை செவிலியருக்கு கொரோனா - ரயிலில் உடன் பயணித்தவர்களுக்கு பரிசோதனை...

webteam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சுகாதார பணி செவிலியருக்கு கொரோனா தொற்று அறிகுறி என்பதால் ரயிலில் உடன் பயணித்த பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் இன்று சோதனை நடத்தினர்.

அரக்கோணம் அடுத்த திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார்.

சாலையில் தானே கெடுபிடி: கடல் வழியாக 1000கிமீ பயணம் செய்த தொழிலாளர்கள்!
அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனோ அறிகுறி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அரக்கோணம் அடுத்த திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரில் உள்ள அவரது வீட்டை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் மற்றும் குடியிருப்புவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் மத்திய மற்றும் மாநில அரசு அத்தியாவசிய பணியில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் நாள்தோறும் பணிக்கு சென்றுவர தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை காலை மற்றும் மாலை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயிலில் அரக்கோணத்திலிருந்து பெண் செவிலியர் நாள்தோறும் பணிக்கு சென்று வந்ததால் அவருடன் ரயிலில் பயணம் செய்த சக பணியாளர்களுக்கு அரக்கோணம் வட்டார சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவினர் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் இன்று காலை கொரோனோ பரிசோதனை நடத்தினர். இந்த சோதனையில் யாருக்கும் எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.