தமிழ்நாடு

தமிழக கிராமப்புறங்களில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!

தமிழக கிராமப்புறங்களில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!

kaleelrahman

தமிழகத்தின் நகரங்களின் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது.

இந்தியாவின் பெரு நகரங்களைக் காட்டிலும், அதில் இருக்கக்கூடிய கிராமப் பகுதிகளில் அண்மை நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவாரூர், தர்மபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவை அனைத்தும் கிராமப்புற மாவட்டங்களாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையில், இந்த கிராமப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 3,158 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. கொரோனா முதல் அலையின்போது, அதாவது 2020 மார்ச் முதல் 2021 மார்ச் 1ம் தேதி வரையிலான காலத்தில் கண்டறியப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,475 என்ற அளவில் இருந்தது.

ஆனால், தற்போது சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் 1,300-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. முதல் அலையின்போது இந்த எண்ணிக்கை 540 ஆகக் குறைந்திருந்தது. இரண்டாவது அலையில், சென்னையில் ஒரு மாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டாலும், பாதிப்பு விகிதம் கிராமப்புற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதேபோல தடுப்பூசியும் சென்னை, மதுரை போன்ற நகரங்களை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் குறைவாகவே போடப்படுவதாகத் தெரிகிறது.