தமிழகத்தில் கிருஷ்ணகிரியைத் தொடர்நது, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டமும் மாறியுள்ளது நம்பிக்கையை அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்த தாய்லாந்து குடியுரிமை பெற்றவர்களிடம், முதல்முறையாக மார்ச் 16 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 70 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் பெருந்துறையைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஏப்ரல் 11 ஆம் தேதி உயிரிழந்தார். மற்ற அனைவரும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரவு பகலாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்ததன் பலனாக குணமடைந்து 5 கட்டங்களாக வீடு திரும்பினர்.
இதையடுத்து இன்று வரை, தொடர்ந்து 21 வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத பசுமை மண்டலமாக மாறியதாக மாவட்ட எஸ்.பி. சக்தி கணேஷ் அறிவித்துள்ளார். எனினும், பொதுமுடக்கம் குறித்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.