தமிழ்நாடு

கொரோனா அச்சம்: தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட சீர்காழி மீனவ கிராம மக்கள்

கொரோனா அச்சம்: தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட சீர்காழி மீனவ கிராம மக்கள்

kaleelrahman

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கிராம சாலைகளை மூடி கிராம மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை கண்டு மக்கள் அஞ்சிய நிலையில் தற்போதைய இராண்டாவது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் கிராம பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சீர்காழி நகர் பகுதியை மட்டுமே சார்ந்துள்ள 50-க்கும் மேற்பட் கிராம மக்கள், நகர் பகுதிக்கு வந்து செல்வதை குறைத்துள்ளனர்.

சீர்காழியை சுற்றியுள்ள கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் உள்கிராமங்களை சேர்ந்த மக்கள் தாங்களே முழுமையாக தங்கள் கிராமத்தை தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். பிரதான சாலைகளில் சோதனை சாவடியை ஏற்படுத்தி, தங்கள் கிராமத்திற்குள் வெளிநபர்கள் அனுமதியில்லை என அறிவிப்பு பதாகைகள் வைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள நகர் பகுதியிலேயே மக்கள் அலட்சியமாக சுற்றி திரியும் நிலையில் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் உள்கிராம மக்களில் சுயக்கட்டுப்பாடு மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளது.