தமிழ்நாடு

தமிழகத்தின் புறநகர், கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா 2-வது அலை!

தமிழகத்தின் புறநகர், கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா 2-வது அலை!

sharpana

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மே 2-வது வாரத்தில் புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

100 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையே, கொரோனா பாசிடிவிட்டி ரேட் எனப்படுகிறது. தமிழகத்தில் இது கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளது. மே 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாசிடிவிட்டி ரேட் 20 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை ஒப்பிடும்போது, மாநிலத்திலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாசிடிவிட்டி ரேட் 32 சதவீதமாக உள்ளது. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 11 சதவீதம் உள்ளது. மே 2 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், சில மாவட்டங்களில் தொற்றின் வேகம் இருமடங்காகியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 சதவிகிதமாக இருந்த பாசிட்டிவிட்டி ரேட், 26 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பாசிடிவிட்டி ரேட் 22.8 சதவிகிதத்திலிருந்து 32.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

புறநகர் பகுதிகள், கிராமங்கள் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பொதுமுடக்கத்தை மதிக்காமல் அதிக அளவில் கூடுவதும், முக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாததுமே, சிறுநகரங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் சுமார் 1.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், 30,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது. தொற்று உறுதி செய்யப்படும் நபர் குறைந்தபட்சம் 10 பேரிடம் தொடர்பில் உள்ள நிலையில், பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் கொரோனா தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.