தமிழ்நாடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: திட்டம் இன்று தொடக்கம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: திட்டம் இன்று தொடக்கம்

Veeramani

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் நிவாரண வைப்புத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தொற்றினால், பெற்றோர் இருவரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டு, 18 வயது நிறைவடையும்போது அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளில் ஒரு சிலர், நிவாரண வைப்புத்தொகையை பெற உள்ளனர்.