தமிழ்நாடு

ஹார்டுவேரான சாஃப்ட்வேர் மகன்; தண்ணியை பீய்ச்சி அடித்த கொரட்டூர் போலீஸ்: நடந்தது என்ன?

JananiGovindhan

போலீசிடம் பிடிபடாமல் இருக்க பெற்ற தாயின் கழுத்தில் கத்தியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய சாஃப்ட்வேர் இன்ஜினியரை சமயோஜிதமாக கைது செய்திருக்கிறார்கள் சென்னை போலீஸ்.

கொரட்டூரின் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர்கள் குணசேகரன் - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 33 வயதில் காமேஷ் கண்ணன் என்ற மகனும், மருத்துவம் படிக்கும் நிவேதா குமாரி என்ற மகளும் இருக்கின்றனர். சாஃப்ட்வேர் இன்ஜினியரான காமேஷ் கண்ணன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்கையில், கடந்த ஜனவரி 5ம் தேதி வீட்டில் இருந்த போது குணசேகரனுக்கும், காமேஷ் கண்ணனுக்கும் இடையே பணப்பரிவர்த்தனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாதம் சூடுபிடித்த சமயத்தில் சட்டென ஆத்திரப்பட்ட காமேஷ் கண்ணன் சத்தம் போட்டிருக்கிறார்.

இதனையடுத்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறார். காமேஷ் கண்ணனின் இந்த அசாதாரணமான நடத்தையை கண்டு மிரண்டுப்போன தாய் லட்சுமி பாயும், சகோதரி நிவேதா குமாரியும் வீட்டில் உள்ள அறைகளில் சென்று ஒளிந்துக்கொள்ள, அப்பா குணசேகரனோ பக்கத்து வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

காமேஷ் கண்ணனின் அலப்பறைகளை கண்ட அண்டை வீட்டார் கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க உடனடியாக அவர்களும் விரைந்திருக்கிறார்கள். அப்போது போலீசிடம் சிக்காமல் இருக்க ரூமில் இருந்த தாய் லட்சுமிபாய் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியிருக்கிறார் காமேஷ்.

இதுபோக வீட்டின் மெயின் கதவையும் பூட்டிவிட்டு சகோதரி நிவேதா குமாரி இருந்த அறையையும் பூட்டியிருக்கிறார் காமேஷ் கண்ணன். அப்போது விரைந்து சென்ற அம்பத்தூர் தீயணைப்புத் துறையினர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசாரின் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.

அங்கு காமேஷின் பிடியில் இருந்த அவரது அம்மாவை காப்பாற்றும் வகையில் காமேஷ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை நிலைக்குலையச் செய்த பிறகு கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவியை பிரிந்து இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் காமேஷ் கண்ணன் ஆளானதாலேயே இப்படியாக நடந்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து காமேஷ் கண்ணனின் உடல் மற்றும் மனநிலையை பரிசோதித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.