Copper wire theft pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: மின்மாற்றியை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருட்டு

ஆம்பூர் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் இறைப்பான் அறையிற்காக அமைக்கப்பட்ட மின்மாற்றியை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் கொள்ளை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கொம்பேஸ்வரம் பகுதியில் உள்ள பாலாற்று படுக்கையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான நீர் இறைப்பான் அறை மற்றும் கூட்டுக் குடிநீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 12 கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Transformer

நீர் இறைப்பான் அறைக்காக அதன் அருகிலேயே மின்சார வாரியம் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான 250 kv மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றியில் இருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் நீர் இறைப்பான் அறையில் இருந்த மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆம்பூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மின்மாற்றியில் இருந்து காப்பர் கம்பிகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.