தமிழ்நாடு

கூட்டுறவு சங்க தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கூட்டுறவு சங்க தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

கூட்டுறவு சங்கங்களின்  தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த, உறுப்பினர்கள் பட்டியல், வாக்காளர்கள் பட்டியல், வேட்புமனு பரிசீலனை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், என்.ஷேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறந்தவர்களின் பெயர்கள் உறுப்பினர் பட்டியலில் இருப்பதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு, அனைத்து நடைமுறைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தது. இதையடுத்து வழக்கு குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஒரு வார்த்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.