முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாடுகள் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த தமிழ்நாடு அரசின் விரிவான விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த மாதம் 27 முதல் இந்த மாதம் 10ம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்த அவரது பயணத்தால், எவ்வளவு முதலீடுகள் கிடைத்தன என்ற விவரத்தை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கையெழுத்திட்டதாக கூறப்படும் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்தால், முதல்வருக்கு திமுக பாராட்டு விழா நடத்தத் தயார் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், வெளிநாடு பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த தமிழ்நாடு அரசின் முழுவிவர அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் 27 நிறுவனங்கள் சார்பில் 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தகளால் 24 ஆயிரத்து 720 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாண அமைப்பு ரீதியான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு குடியரசில் 6 ஒப்பந்தங்கள் மூலம் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடும், 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், செய்யவுள்ள முதலீடு, கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு என 41 ஒப்பந்தங்களின் விரிவான தகவல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.