தமிழ்நாடு

”திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஓயாத துன்பங்களை மட்டுமே அனுபவிக்கிறார்கள்” - ஓ.பி.எஸ்

”திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஓயாத துன்பங்களை மட்டுமே அனுபவிக்கிறார்கள்” - ஓ.பி.எஸ்

ஜா. ஜாக்சன் சிங்

திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் ஓயாத துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொய்யான, போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததால் திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்தது. அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகே சட்டம் கொண்டுவர முடியும் என்ற நிலையில், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என தேர்தல் நேரத்தில் திமுக பொய் பரப்புரை மேற்கொண்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி குறித்து இதுவரை திமுக அரசு ஏதும் கூறவில்லை.

மாதம் ஒரு முறை மின் கட்டண நிர்ணயம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் ரத்து, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, சமையல் எரிவாயுக்கு 100 ரூபாய் மானியம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு பயன் தராத, துன்பங்கள் நிறைந்த துயரமான திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டனர். இவ்வாறு அதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.