ashwini pt desk
தமிழ்நாடு

தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் இருந்தால் குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெறலாம்: கிராமத்து மாணவி

குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து போராடினால் தேர்வில் வெற்றி பெற்று சாதிக்கலாம் என அந்த மாணவி தெரிவித்தார்.

webteam

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகர் - சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி. பொறியியல் பட்டதாரியான இவர், தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 229-வது இடமும், தமிழக அளவில் 5-வது இடமும் பிடித்து அஸ்வினி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தங்களது கிராமத்தில் இருந்து முதன் முதலாக குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் அஸ்வினிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அஸ்வினி அஸ்வினிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கோத்து கொடுத்தும் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

aishwini

இதைத் தொடர்ந்து இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சாதனை மாணவி அஸ்வினி பேசிய போது... பொறியியல் பட்டப்படிப்பை முடித்து தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் வேலையை உதறித் தள்ளிவிட்டு தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு 4 முறை தோல்வியடைந்தேன். இருந்த போதிலும் விடா முயற்சியின் காரணமாக ஐந்தாவது முறை தேர்வெழுதி அகில இந்திய அளவில் 229 வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தன்னுடைய தர வரிசை பட்டியலுக்கு ஐபிஎஸ் ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புகிறேன். மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். குடிமை பணிகள் தேர்வு எளிதானது தான். இதில் வெற்றிபெற தொடர் பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். ஓரிரு முறை தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற்று சாதிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

aishwini

தங்களது கிராமத்தில் இருந்து முதல் முறையாக குடிமை பணிகளில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்த கிராம மக்கள், கொண்டாடி வருகின்றனர்.