தமிழ்நாடு

இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா? - தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்

இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா? - தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்

webteam

மத்திய அரசு உத்தரவை மீறி இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா என தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மத்திய அரசு இபாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது. சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் இபாஸ் முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்களுக்கு அட்மிஷனுக்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும், சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்லவும் சிரமங்கள் நீடிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் இல்லையா என தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்த மனித உரிமை ஆணையம் மத்திய அரசு உத்தரவை மீறி இபாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா என 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.