சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானத்தாள் கிராம நிர்வாக அலுவலராக (VAO) வினோத் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை பிடித்து, கனிமவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில், மண் கடத்தலில் ஈடுபட்ட சித்துராஜ் என்பவர், நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமாரை வழிமறித்து தாக்கியதோடு செல்போனை பறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்துபோன வினோத் குமார் முதற்கட்டமாக, அவரிடம் இருந்து தப்பியோடி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். பின் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் உரியமுறையில் புகாரும் அளித்துள்ளார்.
இந்நிலையில், மணல் கொள்ளையர்களின் கொலை மிரட்டலை கண்டித்து ஓமலூர், மேட்டூர், காடையாம்பட்டி ஆகிய மூன்று தாலுகாக்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுகூடி, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வி.ஏ.ஓ-வை மிரட்டிய சித்துராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தூத்துக்குடியில் மணல் கொள்ளை விவகாரத்தில் வி.ஏ.ஓ லூர்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. அதன் சுவடே இன்னும் மறையாத நிலையில், ‘மண் அள்ளுவதை தடுத்தால் கொலை செய்து விடுவேன்’ என மற்றொரு வி.ஏ.ஓ-வை மணல் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி விரட்டியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிற வி.ஏ.ஓக்கள் நம்மிடையே பேசுகையில், “இதுபோன்ற செயல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம நிர்வாக அலுவலர்கள் சட்டத்தின்படி வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும். கனிமவளங்களை எளிதாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும், அதிகாரிகளை மிரட்டுவதும் தொடரும்” என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், “இவ்வழக்கில் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுப்பு எடுத்து எங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.