நெடுவாசலில் நடக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 14 ஆவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க, பலரும் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் , நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பறை இசைத்து, கலைக்குழுவினர் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்காது. மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், போராட்டம் தொடரும் எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.