தமிழ்நாடு

“தொடர் மிரட்டல்கள் ; கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை - நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

“தொடர் மிரட்டல்கள் ; கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை - நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிப்படுகொலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிருபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “ சமூக விரோத கும்பலால் செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோத கும்பலுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும் ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர் நேற்று இரவு வீட்டின் வெளியே செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரின் தந்தை நிருபரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் அங்கு சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார்.


இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அங்கு நிலவிய கஞ்சா வியாபாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து அவர் செய்தி வெளியிட்டதாகவும், இது தொடர்பாக சமபந்தப்பட்டவர்களிடம் இருந்து மிரட்டல் வந்த நிலையில், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. நிருபர் உயிரிழந்தற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம், கோவை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயிரிழந்த செய்தியாளர் மோசஸின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.