தலைமை செயலகம் - பிரதமர் நரேந்திர மோடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

22,000 போலீஸ்... 5 அடுக்கு பாதுகாப்பு...! பிரதமரின் வருகைக்கு தயாராகும் தமிழ்நாடு!

கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கிவைக்க, பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியை நேரு உள்விளையாட்டரங்கில் துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை தமிழகம் வர உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர், பிரதமரை நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க உள்ளனர்.

3 நாட்கள் பிரதமர் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பினை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை குறித்து ஆலோசிக்க தலைமை செயலத்தில் தமிழக அரசின் பொதுத்துறை செயலர் நந்தகுமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக பாதுகாப்பு குழு உட்பட மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், “சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு 22,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பிரதமர் செல்ல இருக்கிறார். சென்னையை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு அதன் பிறகு ராமேஸ்வரம் செல்கிறார் பிரதமர். இதனை தொடர்ந்து மதுரை செல்ல உள்ள பிரதமர், அங்கிருந்து பின் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

தொடர்ந்து ராமர் கோயில் விழாவில் ஜன 22 கலந்துகொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, ட்ரோன்களை பறக்கவிடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.