தமிழ்நாடு

‘நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம்

‘நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம்

EllusamyKarthik

நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில்  பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் காங்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு தடை கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது பஞ்சாயத்து மற்றும் தாலுகா அளவிளான நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மேற்கொள்ளுமாறு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைகோள் புகைப்படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்ததுடன், சர்வே எண்களுடன் அதி துல்லிய  புகைப்படங்களை 3 வாரங்களில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், நீர் நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும் என்றும், நீர் நிலைகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது  என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.