மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எதிர்கட்சியான அ.திமு.க. மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. தி.மு.க. தனது கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைந்தே மக்களவைத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சித் தலைமை தமிழகத்தில் முடிவு செய்திருக்கிறது.
ஆனால் தேர்தலை தனித்து சந்திப்பது போன்ற கருத்துக்களை மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இதனால் கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு அ.தி.மு.க.வை தள்ளியது. ஆனாலும் பாரதிய கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் இணைந்த இந்த தேர்தலை சந்திக்க ஆசைப்படுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 9 நாடாளுமன்ற தொகுதிகளை எதிர்பார்த்து அங்கு களப்பணியை தொடங்கி விட்டது. தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம்தான் அவை. அண்மையில் தமிழகம் வந்த அமித்ஷா, தென் சென்னை, வேலூர் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதேபோன்றுதான் ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் தொடர்ச்சியாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறது பா.ஜ.க.
மாதம் ஒருமுறை பா.ஜ.க. தனது நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்பாக ஆலோசனையையும் மேற்கொண்டு வருகிறது. தென்சென்னை தொகுதியை பொருத்தமட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு அவர் தலைமையில் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தமட்டில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறைந்தது 25 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தினார். ஒருவேளை கடைசி நேரத்தில் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டால் குறைந்தது 25 தொகுதிகளில் களமிறங்கும் அளவுக்கு களப்பணியை மேற்கொண்டு வருகிறது பா.ஜ.க.
அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூடுதலாக கட்சிகளை இணைக்கவும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தேவையான நடவடிக்கைகளை தற்போது தொடங்கிவிட்டன. ஆனால் பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அவர்கள் கேட்கும் 9 தொகுதிகளை அதிமுக எப்படி கொடுக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்