முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கொலையும், ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்துள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நான்காம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில்,ஜெயக்குமாரின் மாயமான செல்போனை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரது வீட்டு கிணற்றிலிருந்து பச்சை நிறத்தில் கத்தியும், ஒரு பாத்திரமும் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும்,வேறு எந்த ஆதாரங்களும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில்தான், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிற்கும், ஜெயகுமாரின் மரணத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்துள்ளனர்.
கடந்த 2012 ல், மார்ச் 29 ஆம் தேதி அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றபோது காரில் கடத்தி கொல்லப்பட்டார். ஆனால் தற்போது வரை கொலை செய்யப்பட்டது குறித்த எந்த ஆதாரங்களும் கிடைக்காமல் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவரின் மரணம் நடந்த பாணிக்கும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரணத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்துள்ளனர்.
1) ராமஜெயம் கடத்தி கொல்லப்பட்டபோது, அவர் கைகளில் டேப் வைத்து சுற்றப்பட்டும், ஜெயக்குமார் கைகளில் கம்பிகளும் சுற்றப்பட்டுள்ளது.
2) ராமஜெயத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் எரிந்த நிலை தென்பட்டுள்ளது. ஆகவே, ராமஜெயத்தை கொலை செய்து எரிக்க முயன்றுள்ளனர். ஜெயக்குமாரை எரித்துள்ளனர்.
3) ராமஜெயத்தின் வாயில் துணி வைக்கப்பட்டும், ஜெயக்குமாரின் வாயில் பாத்திரம் தேய்க்கும் இரும்பு நார் வைக்கப்பட்டும் இருந்துள்ளது.
இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கையில், இருவரின் மரண பாணியும் ஒன்றாகவும்,இரண்டு மரணத்திலும் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று சந்தேகிக்கின்றனர்.
மேலும், ராமஜெயம் கொலையில் எந்த துப்பும் கிடைக்காத்தால் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ராமஜெயம் கொலைவழக்கில் ஈடுபட்டவர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தர்கள்தான் என்ற கோணத்தில்தான் தற்போது ஜெயக்குமார் மரணத்தின் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.