பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் pt web
தமிழ்நாடு

மன்மோகன் சிங்கின் UPA Vs மோடியின் NDA ஆட்சி; ED சோதனை, சொத்துக்கள் முடக்கப்பட்டதன் ஒப்பீட்டு விபரம்!

கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை அதிக அளவில் சோதனைகளை மேற்கொண்டு, சட்டவிரோத பணத்தைப் பறிமுதல் செய்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Angeshwar G

பண மோசடி விவகாரம், சட்ட விரோத பணபரிமாற்றம், வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை கண்காணித்து முறைப்படுத்தும் அமலாக்கத்துறை, அண்மைக் காலமாக சோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. 2005 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில், கடந்த பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் பல மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின் போது அமலாக்கத் துறையின் கீழ் 29 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த பாஜக ஆட்சியில் 755 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரத்து 797 வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள நிலையில், பாஜக ஆட்சி காலத்தில் 5 ஆயிரத்து 155 வழக்குகள் பதிவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 84 இடங்களிலும் பாஜக ஆட்சிக் காலத்தில் 7 ஆயிரத்து 264 இடங்களிலும் அமலாக்கத் துறை சோதனைகள் நடத்தியுள்ளது.

காங்கிரஸின் 9 ஆண்டு கால ஆட்சியில் 5 ஆயிரத்து 86 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 618 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத் துறை மூலம் 43 லட்சம் ரூபாய் மட்டுமே முடக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் 2 ஆயிரத்து 310 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பி வாங்க முடியாத அளவில் 15 ஆயிரத்து 710 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாஜக ஆட்சியின்போது அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.