தமிழ்நாடு

பீகார் தேர்தலில் சறுக்கிய காங்கிரஸ்... தமிழகத்தில் தொகுதி பங்கீட்டில் பாதிக்குமா?

பீகார் தேர்தலில் சறுக்கிய காங்கிரஸ்... தமிழகத்தில் தொகுதி பங்கீட்டில் பாதிக்குமா?

JustinDurai

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிகக்குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்று பெற்றுள்ளது. அதாவது வெற்றி விகிதம் 27 சதவீதம் மட்டுமே. பாதிக்கு பாதி இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் கூட மகா கூட்டணி ஆட்சி அமைத்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால், காங்கிரசின் தோல்வி ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரசின் இந்த தோல்வி வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கான தொகுதி பங்கீட்டில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தமிழகத்தில் குறைந்த அளவிலான தொகுதிகளைதான் கைப்பற்றியது. இரண்டுமுறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. 2011 சட்டமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றது. 2016இல் திமுக அளவுக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், ஆட்சி மாறி அமைந்திருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்றாக இருந்தது. இந்நிலையில், பீகாரில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறும் பத்திரிகையாளர் ஷ்யாம், கொகுதி பங்கீட்டில் திமுக கறார் காட்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

பீகாரின் தேர்தல் முடிவு கருத்தில் கொள்ளப்படுமா அல்லது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அரசியல் களம் வேறு என கருதப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.