சென்னை விருகம்பாக்கம் வடக்கு பகுதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜபாண்டி, நேற்று பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், 'தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி மக்களவை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்து வரும் ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக எச்.ராஜா பேசியுள்ளார். இத்தகைய பேச்சுக்கள் பொது மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் கலவரம், அமைதிக்கு குந்தகம் போன்றவற்றை தூண்டிவிடும் வகையில் அமைகின்றன. பெண்கள், இளைஞர்கள், தலித்துகள் மற்றும் பிற விளிம்புநிலை பிரிவினர் போன்ற சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் தொடர்பான பிரச்னைகளை ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார்.
தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா கடந்த 15ஆம் தேதி அளித்த பேட்டியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் கலவரம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது பேட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை குலைக்க நினைக்கிறார். மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.