pm modi pt web
தமிழ்நாடு

"தேர்தல் நடைபெறும் நாளில் குமரியில் பிரதமர் மோடியின் தியானம் ஏன்?” - காங்கிரஸ், திமுக எதிர்த்து மனு!

மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி திமுக மனு அளித்துள்ளது.

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருவதை ஒட்டி காவல்துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாளை முதல் மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், அவரின் வருகையை ஒட்டி, ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகைகளும், தரைவழியாக அவர் செல்லும் பகுதிகளில் தீவிர சோதனைகளும், கடற்பகுதியில் தீவிர ரோந்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஆதார் அட்டை சரிபார்ப்பு மற்றும் விலாசம் பெறப்பட்டு, அவர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போன்று அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும், தங்கி இருப்பவர்களின் விவரங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் பயண திட்டத்தில், அவர் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்ல உள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதி திருவள்ளூவர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும்போது பிரதமரின் தியான நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைம் யுக்தியாகவே அது பிரதிபலிக்கும். எனவே அவரது வருகையை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சி மேலிடத்தில் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என திமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் மனு

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடியை தியானம் செய்ய அனுமதிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.