Premalatha, Anbumani pt desk
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: யார் யாருடன் கூட்டணி? பாமக, தேமுதிக இடையே நீடிக்கும் குழப்பம்...

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கின்றன. தேமுதிக அதிமுகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ள நிலையில், பாமக எந்த கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

webteam

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது.

LokSabhaElection BJP

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என தேமுதிக தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவுடன் அந்தக் கட்சி தற்போது வரை தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவில்லை. இரு தரப்பிலும் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. மேலும், ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட 19 மற்றும் 20ஆம் தேதிகளில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், மனுக்களை பூர்த்தி செய்து 20ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாளான 21ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk office

இது ஒருபுறம் இருக்க பாமக யாருடன் கூட்டணி சேரப்போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது. டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை பாமக தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், பாமக மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாமகவை கூட்டணியில் இணைக்க பாஜக மற்றும் அதிமுக முயற்சித்து வருகின்றன.

வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.